பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய முதன்மை மற்றும் திருத்தச் சட்டவாக்கங்கள் சட்டவரைஞர் திணைக்களத்தினால் வரையப்படுவதனையும் துணைநிலைச் சட்டவாக்கங்கள் மீளாயப்படுவதனையும் கோருவதில் அமைச்சுக்களினாலும் திணைக்களங்களினாலும் கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைமுறை.

1. சட்டமூலமொன்று தயாரிக்கப்படுவதற்காக இயைபான அமைச்சுக்கான செயலாளரினால் சட்டவரைஞருக்கான கோரிக்கையொன்று எழுத்திலிருத்தலும் பின்வரும் ஆவணங்களுடன் சேர்த்தனுப்பப்படுதலும் வேண்டும்:-

  • உத்தேசிக்கப்பட்ட சட்டவாக்கம் எந்தக் கொள்கையின் அடிப்படையிலிருத்தல் வேண்டுமோ அந்தக் கொள்கையை எடுத்துக்கூறுகின்றதும் அத்தகைய சட்டவாக்கத்தை வரைவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தை நாடுகின்றதுமான அமைச்சரவை நிருபம்
  • நிருபம் தொடர்பாக அமைச்சரவை முடிபு அத்துடன்
  • சட்டவாக்கம் வரையப்படுவதனை வசதிப்படுத்தும் தகவலைக்கொண்டுள்ள வேறு இயைபான ஆவணங்கள்.

2.அதன்மேல் சட்டவரைஞர், உத்தேசிக்கப்பட்ட சட்டவாக்கத்தின் முதனிலை வரைவுச் சட்டமூலத்தை (ஆங்கிலத்தில்) தயாரிப்பாரென்பதுடன், இவ்வரைவுச் சட்டமூலம் கோரிக்கை விடுக்கின்ற அமைச்சுக்கு அதன் அவதானிப்புகளுக்காக அனுப்பிவைக்கவும்படும்.

3.முதனிலை வரைவுச் சட்டமூலம் அமைச்சரவையினால் முடிபுசெய்யப்பட்ட கொள்கைக்கு இசைந்தொழுகவுள்ளதெனக் கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சிடமிருந்தான இறுதி உறுதிப்படுத்துகையின்மேல்இ சட்டவரைஞர்இ இயைபான சட்டமூலத்தின் இறுதி வரைவொன்றைக் கோரிக்கைவிடுக்கும் அமைச்சுக்கும் சட்டத்துறைத் தலைமையதிபதிக்கான அதன் பிரதியொன்றையும் அனுப்பிவைப்பார்.

4. அதன்மேல் சட்டத்துறைத் தலைமையதிபதிஇ அரசியலமைப்பின் 77 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளைப் பின்பற்றி வரைவுச் சட்டமூலத்தின் அரசியலமைப்புக்கிசைவாந்தன்மை பற்றிய அவதானிப்புகளைச் செய்வாரென்பதுடன், வரைவுச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அவரது அபிப்பிராயத்தில் -

  • அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறாதவிடத்து, சட்டத்துறைத் தலைமையதிபதி, கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சுக்கு அப்பொருள்பட்ட சான்றிதழையும் சட்டவரைஞருக்கான அதன் பிரதியொன்றையும் வழங்குவார் அல்லது,
  • அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டை மீறுமிடத்து, சட்டத்துறைத் தலைமையதிபதி, சட்டமூலத்தின் சட்டவரைஞருக்கான பிரதியொன்றுடன், கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சுக்கு அதற்கிணங்க அவரது அவதானிப்புகளைச் செய்வார். வரைவுச் சட்டமூலத்துக்கு அத்தகைய திருத்தங்கள் செய்யப்படுவதன்மேல், சட்டத்துறைத் தலைமையதிபதி, ஏற்பாடுகளானவை அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டை மீறுவனவல்ல என்ற பொருள்பட்ட சான்றிதழொன்றையும் வழங்குவார்.

5. சட்டத்துறைத் தலைமையதிபதியின் சான்றிதழைப் பெற்றதன்மேல், சட்டவரைஞர், அப்போது, சட்டமூலத்தின் சிங்கள, தமிழ் வரைவுகளைக் கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சுக்கு அனுப்பிவைப்பார். திருத்தச் சட்டவாக்கத்தின் விடயத்தில் மும்மொழிகளிலுமுள்ள சட்டப்பயன் பற்றிய கூற்றும் அக்கட்டத்தில் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும்.

6. கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சு, அப்போது, வரைவுச் சட்டமூலத்தை மும்மொழிகளிலும் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமென்பதுடன், வரைவுச் சட்டமூலம் வர்த்தமானியின் பாகம் II இல் வெளியிடப்படுவதற்கும் அதனைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான அங்கீகாரத்தையும் நாடும். வரைவுச் சட்டமூலத்துக்கு மேற்கொண்ட திருத்தங்கள் செய்வது தேவையாகவுள்ளதென அமைச்சரவை இக்கட்டத்தில் முடிவுசெய்தால், அப்போது, அமைச்சு, இயைபான அமைச்சரவை முடிவை, மும்மொழிகளிலும் வரைவின் பிரதிகளுடனும் சட்டப்பயன் பற்றிய கூற்று ஏதேனுமிருப்பின் அதனுடனும்சேர்த்து, வரைவில் இயைபான திருத்தங்கள் சேர்க்கப்படுவதற்காகச் சட்டவரைஞருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

7. பந்தி 6 இல் எதிர்நோக்கப்பட்ட நிலைமை எழுந்தால், அப்போது, பந்திகள் 3, 4 மற்றும் 5 என்பவற்றில் தரப்பட்டுள்ள நடவடிக்கைமுறை, அப்போது மீண்டும் பின்பற்றப்படுதல் வேண்டும்.

8. சட்டமூலமானது அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படுவதனை அமைச்சரவை அங்கீகரித்ததும், அமைச்சானது, வரைவை மும்மொழிகளிலும் அரசாங்க அச்சகருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். வரைவுச் சட்டமூலமானது முதலில் அரசாங்க வர்த்தமானிக்கான குறைநிரப்பியாக வெளியிடப்படுகின்றதுடன், மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டபோது, அச்சுப்பிரதிகள், இறுதி ஒப்புநோக்குதலுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் சட்டவரைஞருக்கு அச்சகரினால் அனுப்பிவைக்கப்படும்.

9. வரைவுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும், அரசியலமைப்பின் நியதிகளின்படி, வெளியீட்டுத் திகதியிலிருந்து 14 நாட்கள் முடிவுற்றபின்னர் மட்டுமே அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுதல் வேண்டும். முன்வைப்புக்குப்பின்னர் (முதலாவது வாசிப்பு) அதனை ஒரு சட்டமூலம் என்ற வடிவத்தில் அச்சிடும்படி பாராளுமன்றமானது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தைப் பணிக்கின்றதுடன், இலக்கமொன்றும் கொடுக்கப்படுகின்றது. அட்டைப் பக்கத்தின் தோற்றத்திலான மாற்றம் மட்டுமே இடம்பெறுவதுடன், வரைவின் உள்ளீட்டுக்கு மாற்றமெதுவும் செய்யப்படுவதில்லை.

10. சட்டமூலமொன்று ஒழுங்குப்பத்திரத்தில் இடப்பட்டதும், இரண்டாவது வாசிப்பு விவாதத்துக்கான திகதியொன்று (அது முன்வைக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு முன்னதாகவிராதவொரு நாளன்று) நிர்ணயிக்கப்படுகின்றது. எவரேனும் பிரசை உயர்நீதிமன்றத்தில் சட்டத்தை எதிர்ப்பதற்காக அத்தகைய காலப்பகுதி கொடுக்கப்படுகின்றது. இரண்டாவது வாசிப்புக்குப்பின்னர் இடம்பெறுகின்ற சட்டமூலத்தின் குழுநிலையில், விவாதிக்கப்படுகின்ற விடயங்கள் சம்பந்தமாக எழுகின்ற ஏதேனும் மாற்றம் குழுநிலைத் திருத்தங்கள் என்றவகையாகச் செய்யப்படலாம். அமைச்சரவையினால் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைக்குப் புறம்பான புதிய விடயமெதுவும் குழுநிலைத் திருத்தங்கள் என்றவகையாக உள்ளடக்கப்படுதலாகாது.

  • சட்டமூலமானது விவாதத்துக்காகப் பாராளுமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்படுமுன்னர் எந்நேரத்திலேனும் சட்டமூலத்துக்குத் திருத்தங்கள் முன்மொழியப்படின், சட்டமூலத்தின் குழுநிலையில் பிரேரிக்கப்படவேண்டிய குழுநிலைத் திருத்தங்கள் என்ற வடிவத்திலான அவசியமான திருத்தங்களை வரையும்படி, கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சானது சட்டவரைஞருக்குக் கோரிக்கைவிடுக்கும். இத்திருத்தங்கள் மும்மொழிகளிலும் சட்டவரைஞரினால் தயாரிக்கப்பட்டதும், சட்டமூலமானது இரண்டாவது வாசிப்புக்காக நிர்ணயிக்கப்படுவதற்கு ஆகக்குறைந்தது ஒருநாளுக்கு முன்னரேனும் சட்டத்துறைத் தலைமையதிபதிக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் பிரதிகள் அனுப்பப்படும்.
  • சட்டவாக்கத்தின் கொள்கையானது அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருப்பதனாலும், அதனைச் சவாலுக்குட்படுத்தமுடியாததனாலும்,  சட்டவாக்கக் கொள்கையிலான மாற்றங்கள் எவையும் அல்லது அதன் ஏற்பாடுகளுள் எவற்றிலும் ஏதேனும் கணிசமானளவு மாற்றம், குழுநிலைத் திருத்தங்கள் என்றவகையாக அறிமுகப்படுத்தப்படுதலாகாது: ஒரே விதிவிலக்கு என்னவெனில், அறிமுகப்படுத்தப்படுவதற்கு நாடப்படுவது ஒரு கட்டாய வழிமுறையாகவிருக்குமிடத்தும், அமைச்சரவையின் அங்கீகாரம் அதற்காகப் பெறப்பட்டுள்ளவிடத்தும் ஆகும்.
  • சட்டமூலத்தின் விவாதத்தின்போது எந்நேரத்திலும், கோரிக்கை விடுக்கின்ற அமைச்சு வரைவுச் சட்டமூலத்துக்குக் குறித்த சில திருத்தங்களைச் செய்வதற்கு உடன்படின், அப்போது, விவாதத்தின்போது பாராளுமன்றத்திற் சமுகமளித்துள்ள சட்டவரைஞர் திணைக்களத்தின் அலுவலருக்கு அதனை அவர்கள் அறிவித்தல் வேண்டும். அத்தகைய திருத்தங்கள் சட்டமூலத்தின் குழுநிலைக்கு முன்னர் அத்தகைய அலுவலரினால் தயாரிக்கப்படுமென்பதுடன், அமைச்சின் அலுவலர்களுக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் கொடுக்கவும்படும். சட்டமூலத்தின் குழுநிலையில் குழுநிலைத் திருத்தங்கள் இயைபான அமைச்சரினால் பிரேரிக்கப்படக்கூடியவகையில் அத்திருத்தங்கள் அவருக்குக் கொடுக்கப்படுதல் வேண்டும். அரசியலமைப்புக்கு இசைவற்றதாகவிருக்கக்கூடிய ஏதேனும் விடயத்தை அறிமுகப்படுத்துவதற்கு நாடுகின்ற திருத்தமெதனையும் இந்நிலையில் அறிமுகப்படுத்துவதற்கு நாடுதலாகாது. சட்டவரைஞர் திணைக்களத்தினதும் சட்டத்துறைத் தலைமையதிபதித் திணைக்களத்தினதும் அலுவலர்கள் இவ்விடயம்பற்றி அவசியமான மதியுரையை அளிப்பார்கள்.
  • ஒரு சட்டமூலத்துக்குக் குழுநிலைத் திருத்தங்கள் பிரேரிக்கப்படின், அப்போது, பாராளுமன்றத்தில் சமுகமளித்துள்ள சட்டத்துறைத் தலைமையதிபதித் திணைக்களத்திலிருந்தான அலுவலர், திருத்தங்களின்/ சட்டமூலத்தின் அரசியலமைப்புக்கிசைவாந்தன்மை பற்றிய சான்றிதழைப் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கு வழங்குவார்.

ஒழுங்குவிதிகள், விதிகள், கட்டளைகள், துணைவிதிகள் மற்றும் சட்டப்பயனைக்கொண்ட வேறு அறிவிப்புகள் அல்லது பிரகடனங்கள்

  • துணைநிலைச் சட்டவாக்கம் சம்பந்தப்பட்ட அமைச்சினால் வரையப்பட்டு மீளாய்வுக்காகச் சட்டவரைஞருக்கு அனுப்பப்படுவதற்குத் தேவைப்படுத்தப்படுகின்றது. அது இணைப்பிரதியிலும், மும்மொழிகளிலும் இருத்தல் வேண்டும். (தாபனக் கோவையின் அத்தியாயம் XXXIII).
  • வரைவுத் துணைநிலைச் சட்டவாக்கம் சட்டவரைஞரினால் மீளாயப்பட்டு இயைபான அமைச்சுக்குத் திருப்பியனுப்பப்படும். அது அட்டவணைகளை உள்ளடக்கினால் விடயத்துடன் தொடர்புபட்ட தொழினுட்ப அல்லது வேறு தகவலின் செம்மைக்கான பொறுப்பு, சம்பந்தப்பட்ட அமைச்சைச் சார்ந்ததாகும்.
  • சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட வரைவுத் துணைநிலைச் சட்டவாக்கம் கணிசமானளவு போதியதற்றதாகவும் ஓர் அடிப்படையாகப் பயன்படுத்தமுடியாததாகவும் இருப்பின், அப்போது அவசியமான துணைநிலைச் சட்டவாக்கம் சட்டவரைஞர் திணைக்களத்தினால் புதிதாக வரையப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு மும்மொழிகளிலும் கோரிக்கைவிடுக்கின்ற அமைச்சுக்கு அனுப்பப்படும். துணைநிலைச் சட்டவாக்கங்கள், அவற்றை ஆக்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் கையொப்பமிடப்பட்டதும், வர்த்தமானியில் வெளியிடப்படுதல் வேண்டும். துணைநிலைச் சட்டவாக்கங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன்மீது அல்லது குறித்துரைக்கப்பட்ட திகதியன்று பயனுறுகின்றன. எவ்வாறாயினும், அதன்பின்னர் வசதியாகின்றவாறு விரைவாக அவை பாராளுமன்றத்தின்முன்னர் இடப்படுதல் வேண்டும். வர்த்தமானியில் வெளியிடப்பட்ட துணைநிலைச் சட்டவாக்கம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறாவிடின், அப்போது, அது, அதன்கீழ் முன்னர் செய்யப்பட்ட எதற்கும் பங்கமின்றி, அத்தகைய திகதியிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுகின்றது.
Scroll To Top